மொழியின் ஓவியம்
எனக்குப் பிறகு நான் அதிகம் நம்புவது இந்த ஓவியங்கள்(எழுத்து) தான்.
என்னை பக்குவப்படுத்தியது, பக்குவப்படுத்திக் கொண்டிருப்பது யாரோ ஒருவரினுடைய எழுத்து. எத்தனைக்குப் பிறகும் என்னை உயிர்ப்புடன் மீண்டெழச்செய்யும் வல்லமை படைத்தது.
நான் வாசிக்கும் ஓவியத்தில் அன்றாடம் என்னைத் தேடும் வழக்கம் உடையவள் நான். அது என்னை சிரிக்க வைக்கும். அழ வைக்கும். அழுத கண்களை ஆற்றுப்படுத்தும். சிந்திக்கத் தூண்டும். காதலிக்க கற்றுக்கொடுக்கும். வெட்கமூட்டும். இவ்வாழ்வின் மீதான தேடலை அதிகரிக்கும். வலி நிறைந்த எழுத்துக்கள் என் காயங்களை சற்று ஆறச்செய்யும். கடந்து வந்த காயத்தின் தழும்புகளில் மீண்டும் அரிப்பூட்டச்செய்யும். இனம், மொழி தெரியாத மனிதர்களை நெருங்கிய உறவாக மாற்றும். அன்றாடம் சலித்த சமயத்தில் பரிட்சயமில்லா உலகில் உலவவிடும். அவ்வுலகிலும் கண்ணீருக்கு இடமிருக்கும்.
எனக்கான ஆகப்பெரும் ஆறுதல் என் எழுத்துகள். என் எழுத்துகள் என் பேச்சை மட்டும் தான் கேட்கும். என் சிந்தனைக்கு அப்பாற்பட்டு மயிரிழையும் யோசிக்காது. இதைவிட வேறென்ன காரணம் வேண்டும் இதை இவ்வளவு நேசிக்க. என் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கும். அவ்வப்போது கவிஞன் என நம்பவைத்து ஏமாற்றவும் செய்யும். இவ்வுலகம் முழுவதும் தேடிக் கிடைக்காத எனக்கான ஆண் என் எழுத்துகளில் நிச்சயம் இருப்பான்.
தற்போதைய நான் என்பது கோடான கோடி மொழி ஓவியங்களின் முற்றுபெறா புத்தகம்.
Comments
Post a Comment