உண்மையில் யார் குற்றவாளி?
எந்த கோணத்தில் அல்லது எந்த வடிவத்தில் வன்முறை நிகழ்ந்தாலும் வன்முறையை பற்றிய கருத்துகளையோ, அது சார்ந்த பாதிப்பு குறித்தோ பேசுவதற்குள், எப்படியாவது ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் மீதான வன்மம் பரவத் துவங்கி குற்றங்கள் திசை திருப்பப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருந்தால், செய்தி பரவிய சில மணித்துளிகளிலேயே விவாதங்கள் தொடங்கிவிடும். குற்றவாளி யார்? குற்றங்கள் குறைக்க என்ன வழி? இதிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் எப்படி மீண்டு வருவது? அரசின் தவறு, கடமைகள் என்ன? என இப்படியெல்லாம் அந்த விவாதங்கள் இருக்காது. இவற்றை பேச வேண்டிய தேவை உள்ளவர்களும் கட்டாயத்தின் பேரில் கலாச்சார காவலர்களின் அவதூறுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவள் அந்த உடை போட்டிருக்க கூடாது - இல்லை அது அவளது உரிமை.
அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கக் கூடாது - குற்றவாளிகள் மட்டும் செல்லலாமா?
அந்த பொண்ணு NO சொல்லி இருக்கனும் - அந்த பொண்ணு YES சொல்லவில்லை.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
தற்போது திருத்தணி அருகே ரயிலில் வடமாநில தொழிலாளி ஒருவரை நான்கு சிறார்கள் அரிவாளால் தாக்கிய சம்பவமும் இந்த திசையில்தான் நகர்கிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதற்காக சகமனிதன் எனக்கூட உணராமல் இவ்வளவு பெரிய வன்முறை. இந்த தாக்குதலை அவர்களே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். மிக முக்கிய காரணம் அந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்தது. 18 வயது கூட நிரம்பாத சிறுவர்களிடம் எப்படி கஞ்சா இவ்வளவு எளிதாக கிடைக்கிறது? போதையிலும் பொதுவெளியில் பயணிக்க முடிகிறது, அதிலும் ஆயுதங்களுடன். எந்த ஆழ்ந்த புரிதலும் இல்லாமல் மேலோட்டமாக யோசித்தாலே இது குறித்த அடிப்படை புரிதல் ஏற்படும். கூல் லிப் முதல் கஞ்சா வரை மாணவ, மாணவிகளுக்கு எளிதாக கிடைக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் முக்கிய பொறுப்பு. அதே அரசு அவர்களை அரசியல்படுத்தவிடாமல் முயன்றதன் முக்கிய விளைவுதான் போதை அடிமைதனம், ரீல்ஸ் மோகம் மற்றும் அவற்றின் உச்சமான இதுபோன்ற வன்முறைகள்.
இந்த திருத்தணி சம்பவத்திலும் போதை கலாச்சராம் இவ்வளவு தீவிரமடைந்ததன் காரணம், சிறுவர்கள் போதையின் பக்கம் திசை மாறியதற்கான காரணங்கள், அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், அரசின் மெத்தனப்போக்கு மற்றும் இயலாமை, இதன் விளைவுகள் இவற்றைப்பற்றி எழும் விவாதங்களைவிட அந்த சிறுவர்களின் தோற்றத்தைவைத்து “இவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்" என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர். புள்ளிங்கோ பசங்க என்றாலே இப்படித்தான். அதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் தான் புள்ளிங்கோ-க்கள் என சமூக வலைதளத்தில் தலித்துகள் மீதான வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்ப ஆரம்பித்துள்ளனர். மற்றொருபுறம் தமிழ் சினிமாவில் சமூக அக்கறையோடு விளிம்புநிலை மக்களின் கதைகளையும் திரையில் கொண்டுவரும் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்றோரின் படங்களில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகளே இப்படிப்பட்ட வன்முறைகள் நிகழ காரணம் என ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு குரல் கொடுப்போரின் மீதும் வன்மங்களை பதிவு செய்து வருகின்றனர். இப்படிக்கூறும் ஒருவரும் கமர்ஷியல் என்ற பெயரில் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு என கொலைகளை ஹீரோயிசமாக காட்டும் லோகேஷ் போன்றவர்களையும், துளியும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அதில் நடித்து இளைஞர்களை திசை திருப்பும் விஜய், ரஜினி போன்றவர்களின் படங்களையும் பார்த்ததில்லை போல. இந்த நிகழ்வு இன்னும் ஒரு வாரத்திற்கு அரசியல்வாதிகளுக்கு ஆளும் கட்சியை குறை சொல்லுவதற்கான ஒரு செய்தி மட்டுமே. வழக்கம்போல நடந்த சம்பவம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் பேச முயலும் சமூக அக்கறைகொண்டவர்களும் அதைவிட்டுவிட்டு இப்படி அவதூறுகளை பரப்புபவர்களுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
Well said
ReplyDelete