பயணம் பயமுறுத்துகிறது...

பயணம் பயமுறுத்துகிறது...

பயணம்... வாழ்க்கையில ரொம்ப பிடிச்ச ஒன்னு. நிறைய சம்பாதிக்கனும், நிறைய ஊர் சுத்தனும். இதழியல் படிச்சு அதுல ரிப்போர்ட்டர்-ஆ போனா நிறைய இடங்களுக்கு போகலாம், ஒக்காந்த இடத்துல இருந்தே வேல செய்யத் தேவையில்ல. இப்படி என்னோட தொழிலும் பயணம் சார்ந்து தான் இருக்கனும்-ன்னு 3,4 வருசத்துக்கு முன்னாடியே ஆசபட்டேன். இன்னிக்கும் அந்த ஆசை எல்லாம் இருக்கு. ஆனால்,

எனதருமை ஆண்களே...

எதிர்பார்ப்பதைப் போல குறிப்பாக பெண்களுக்கு அவ்வளவு அழகியல் கொண்டதல்ல பயணம். அது ஒரு அருவெறுப்பு, கண்ணீர், வேதனை, விவரிக்க முடியாத வலி, மீள முடியாத இறுக்கம், கண்ணுக்குப் புலப்படாத பயம். 

என்னைவிட யாரும் என்னை அதிகம் காதலித்துவிட முடியாது என்னும் கர்வம் கொண்டவள் நான். நான் அறிந்த தைரியமான பெண்களில் நானும் ஒருத்தி. இந்த தைரியத்தை நீண்ட காலம் நம்பி என்னையே நான் ஏமாற்றிக் கொள்ளப் போவதில்லை. 

யாருக்கு எதிராக இந்த தைரியமும் கோபமும் துணிச்சலும் இந்தளவிற்கு வலுபெற்றதோ அதே ஆண்களின் ஒரே ஒரு பார்வை போதும் என்னை வலுவற்றவளாக மாற்ற. உடைத்து சுக்குநூறாக்கி, “நீ(பெண்) என்பது இரண்டு முலைகளைக் கொண்ட வெறும் உடல் மட்டுமே” என அடுத்தடுத்த பயணங்கள் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். பொய்யான இந்த நினைவூட்டல் உண்மையும் தானே!?.

பேருந்து, ரயில் என எதுவாயினும் அன்றாடப் பயணங்கள் அத்தனைக் கொடுமையானது. அந்தக் கொடுமையிலும் பணிக்கு சென்றுகொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் கூட அத்தனை அறிப்பெடுக்கும் ஆண்கள் ஆச்சரியமானவர்கள் தான். அதை அப்போதே சரி செய்ய நினைக்கும் வேகம் ஆச்சரியத்தில் ஆச்சரியம். இவர்களுக்கு எந்த வரையறையும் கிடையாது. நிறம், எடை, தோற்றம், படிப்பு, வயது, செய்யும் வேலை இப்படி எதனடிப்படையிலும் இவர்களை வரையறுக்கவே முடியாது. பின்பு எப்படி முன்னெச்சரிக்கையோடு உடனிருப்பவர்களை கணிக்க முடியும்? எனக்குத் தெரிந்தவரையில் உள்ள ஒரே அடையாளம் “ஆண்”. எனவே எனக்கு வேறுவழியில்லை எத்தனை பெரிய உத்தம ஆண்கள் உடன் பயணித்தாலும் எல்லோரும் எனக்கு ஆண்கள் மட்டும்தான்.

என்னுடைய எந்தவொரு தனிமைப் பயணமும் பயமில்லாமல் இருந்தது இல்லை. தினசரி வரும் ரயிலில் பொதுப் பெட்டியை நினைத்தாலே பயம். தப்பித்தவறி எதோவொரு சூழலால் பொதுப் பெட்டியில் ஏறிவிட்டால் இறங்கும் வரை என்னை நோக்கும், மன்னிக்கவும் உற்றுநோக்கும் கண்களை கணக்கிட வேண்டும். ஏன் கணக்கிட வேண்டும்? வேறு ஒன்றும் செய்ய இயலாது. கூட்ட நெரிசலில் நின்றால் உரசும் கைகளை கணக்கிட வேண்டும். இன்னும் சில சமயங்களில் உடலை நடுங்கச்செய்யும் ஆண்குறியையும் கணக்கிட வேண்டும். இதில் நான் புறநகர் ரயிலை மட்டும் குறிப்பிடவில்லை. முன்பதிவில்லாமல் செல்லும் தொலைதூர பயணங்கள் இவ்வாழ்வின் மீதான விரக்தியின் உச்சத்திற்கே கூட்டிச்சென்றுவிடும்.

இப்படியான சூழலில் நான் என்ன செய்வதென்று இதைப் படிக்கும் யாராவது எனக்கு ஒரு பதில் தர வேண்டும். இந்த ஆண்களுக்கு பயந்து நான் மகளிர் பெட்டியில் பயணிக்க வேண்டுமா? அல்லது தவறு அவர்கள் தானே செய்கிறார்கள் அவர்களுக்கு ஏன் நான் பயப்பட வேண்டும் என புரட்சி செய்து அவர்களுடன் பயணிக்க வேண்டுமா?

உங்கள் கருத்து எதுவாயினும் நான் மகளிர் பெட்டியில் தான் பயணிக்கிறேன். எத்தனை நாட்களுக்கு எங்களை தனித்து விடுவீர்கள், தவறு செய்பவர்களை திருத்ததானே முயற்சிக்க வேண்டும் என மகளிர் பெட்டியை விமர்சனப் பார்வையில் பார்த்தவள் நான். இன்று என்னால் அந்த விமர்சனத்தை வைக்க முடியவில்லை. மகளிர் பெட்டி அத்தனை சௌகரியத்தைக் கொடுக்கிறது. மூச்சுமுட்டும் அளவிற்கு கூட்டம் இருந்தாலும் ஒரு நாளும் நான் பயந்ததில்லை. நன்றி பெண்களே!

பேருந்துப் பயணம் இதைவிட பலமடங்கு கொடுமை. பல நாட்கள் அழுகையும் கண்ணீரும் தான். நான் திட்டிய சில ஆண்களின் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை. அவ்வளவு அருவெறுப்பு. அந்த ஆண்களைக் கடந்து வந்தபின், நான் தினம் தினம் ரசிக்கும் என் உடல்மீது ஏற்படும் வெறுப்பை எண்ணி பின்னாலில் நானே வருத்தப்பட்டதும் உண்டு. பின்பு முன்பு என எங்கு எப்படி ஆண்கள் இருந்தாலும் அனைவரையும் சமமாகத்தான் பார்ப்பேன். அதுதானே நியாயம். நான் பாதுகாப்பாக ஆண்கள் சூழாத இடத்தில் நின்றாலும், அமர்ந்திருந்தாலும் மற்ற பெண்களின் நிலையை கவனித்துக் கொண்டே வருவது வழக்கமாகிவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கருகில் நின்றுகொண்டிருந்த 20-25 வயது மதிக்கத்தக்க ஒருவன் தன்னுடைய ஆண் என்னும் அடையாளத்தை வைத்து சீண்டினான். நான் தான் தைரியமான பெண் ஆச்சே. உடனே மொபைலில் பதிவு செய்து அவனை மிரட்டினேன். பயத்தில் நடுங்கிப் போன அவன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டான். (குறிப்பு: இதுபோன்ற சம்பங்களில் நடத்துனர்களால் எதுவும் செய்ய முடியாது. இயல்பாக கடந்துசென்று சீட்டு கிழித்துக் கொண்டிருப்பார்). அவர்கள் முன் அழுதுவிடக் கூடாது என்னும் வைராக்கியம் தான். மற்றபடி தைரியமெல்லாம் ஒன்றுமில்லை. இது மாறாது, வீடியோ எடுப்பதில் பயன் இல்லை, நான் தினமும் வேறுவழியில்லாமல் இப்படித்தான் பயணித்தாக வேண்டும், பொறுத்துப்போக வேண்டும் என இதுகுறித்துக் கூறி நண்பர்களிடம் ஒரே அழுகை. இதுபோல பல நிகழ்வுகள் உண்டு, அதில் அனைத்து வயது ஆண்களுக்கும் பங்கு உண்டு. அடுத்த சில மாதங்கள் கழித்து அதே வழியில் அதே எண் கொண்ட பேருந்தில் அவனைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்க்கவில்லை. இருப்பினும் என்னை அறியாமல் உடல் நடுங்கியது. பதற்றத்தில் செய்வதறியாது இதயம் வேகமாக துடித்தது. அவனுக்கு அது வழக்கமான ஒரு நாள். 

இந்த பயத்தோடு தான் தினமும் பயணங்கள் இருக்கிறது. நான் உறுதியாக சொல்கிறேன் என்னால் எந்த ஒரு சிக்கல்களையும் கடந்து செல்ல முடியும். ஆணின் பாலியல் குற்றங்களைத் தவிர. இன்று இல்லாவிடிலும் என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை பயணத்தில் மட்டும் வந்ததே இல்லை.

Comments

Popular posts from this blog

உண்மையில் யார் குற்றவாளி?

மொழியின் ஓவியம்